ஹோம்வொர்க் செய்யவில்லை என மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியை - போலீசார் வழக்கு பதிவு!
ஆசிரியை தாக்குதல்
தூத்துக்குடி மாவட்டம் களப்பான்குளத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவரின் மகன் சந்தோஷ் கழுகுமலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி அந்த பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை ரெமிலா, மாணவர்களிடம் ஹோம் ஒர்க் நோட்டை கேட்டுள்ளார்.
சந்தோஷ் உள்பட அனைத்து மாணவர்களும் தங்களின் வீட்டுப்பாடங்களை ஆசிரியை ரெமிலாவிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனை முடிந்து வந்ததும், மீண்டும் ஹோம் ஒர்க் நோட்டை எடுத்து வரும்படி ஆசிரியை, மாணவர் சந்தோஷிடம் கேட்டுள்ளார்.
ஆனால் சந்தோஷின் பையிலிருந்த நோட் காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நோட் காணவில்லை என்று ஆசிரியை ரெமிலாவிடம் மாணவன் கூறியதும், அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். ஹோம் ஒர்க் செய்யாமல் பொய் சொல்கிறாயா ? என்று ஆசிரியை ரெமிலா, சந்தோஷை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.
தூத்துக்குடியில், மாணவனை பிரம்பால் அடித்தது தொடர்பாக ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு
இதில் மாணவன் சந்தோஷுக்கு கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த மாணவன் கையை பிடித்து முறுக்கி "எனக்கு வரும் ஆத்திரத்தில் மண்டையில் அடித்து கொன்று விடுவேன்" என்று ரெமிலா மிரட்டியதாக மாணவன் கூறியுள்ளான்.
இதை மாணவர் தடுக்கவே, அவருடைய வகுப்பறையை விட்டு வெளியே பிடித்துத் தள்ளியுள்ளார். இந்நிலையில் தனது மகன் தாக்கப்பட்டது தொடர்பாக தயார் கவிதா, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும், கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் சமாதானமாக செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து கவிதா சைல்ட் லைனுக்கு புகார் அளிக்கவே, அவர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஆசிரியை தாக்கியது உண்மை என தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆசிரியை ரெமிலா மீது கழுகுமலை காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், காயமடைந்த மாணவர் சந்தோஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.