தேனியில் சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம் : சாமியாராக இருக்கும் தந்தை கைது
தேனியில் சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சாமியாராக இருக்கும் தந்தையே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியை சேர்ந்த 48வயதான நபர் ஒருவர் தன்னை ஒரு சாமியார் என சொல்லிக்கொண்டு தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் சாமியாரைப் பிரிந்த அவரது மனைவி குழந்தைகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சாமியாரின் 17 வயதான மகளுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த தனது உறவினரான வல்லரசுபாண்டி தான் காரணம் என சிறுமி அளித்த புகாரில், அந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த வல்லரசு பாண்டி, சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும், தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்டுள்ளார். அதனடிப்படையில் டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து வல்லரசுபாண்டி, சிறுமி, பிறந்த குழந்தை ஆகியோருக்கு கடந்த மே மாதம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளபட்டது. மரபணு பரிசோதனை முடிவில், வல்லரசு பாண்டியன் குழந்தையின் தந்தை இல்லை என்பது உறுதியானது.இதனால் காவல்துறையினருக்கு குற்றவாளி யார்? என கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து சிறுமியின் தாயிடம் நடத்திய விசாரணையில் சிறுமி சில நாட்கள் தேவதானப்பட்டியில் உள்ள சாமியார் தந்தையிடம் தங்கியிருந்ததாக கூறியுள்ளார். இதனடிப்படையில் தந்தையிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை கடந்த மாதம் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் சிறுமியை அவரது சாமியார் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வைத்து அவரை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.