இதுதான் திமுக அரசு தந்த விடியலா? டிடிவி தினகரன் கேள்வி
டிடிவி தினகரன்
பள்ளிக் குழந்தைகளை தீப்பந்த வெளிச்சத்தில் படிக்க வைத்திருப்பதுதான் திமுக அரசு தந்த விடியலா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை அருகே மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் – பள்ளிக் குழந்தைகளை தீப்பந்த வெளிச்சத்தில் படிக்க வைத்திருப்பதுதான் திமுக அரசு தந்த விடியலா?
மின்வசதி
திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
மத்திய அரசின் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு, அடிப்படை வசதிகளில் ஒன்றான மின்சார இணைப்பைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக மின்சாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுக்கு வலியுறுத்தல்
மின்சார வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகள் தீப்பந்த வெளிச்சத்தில் கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டிருப்பதோடு, இரவு நேரங்களில் விஷ ஜந்துகளுக்கு பயந்து அச்சத்துடனே உறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதோடு, அப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சார இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.