பொன்னாடை, நினைவுப் பரிசு வேண்டாம் - நிதியுதவி அளியுங்கள் - டிடிவி தினகரன் வேண்டுகோள்..!

Tamil nadu TTV Dhinakaran Political Development
By Karthick Jan 02, 2024 01:02 PM GMT
Report

கட்சி வளர்ச்சிக்காக நிதியுதவி அளியுங்கள் என கழக தொண்டர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிடிவி அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லிகையையும் மணத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்பதைப் போல என் மீது நீங்களும் உங்கள் மீது நானும் கொண்டுள்ள அன்பு அவ்வளவு அற்புதமானது. நான் தான் நீங்கள். நீங்கள் தான் நான். எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு கண்டிப்பான வேண்டுகோள் ஒன்றை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் முன்வைக்க விரும்புகிறேன். நமது இயக்கம் துரோகத்தின் வலியிலிருந்து உருவானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நமக்கென்று இருக்கும் லட்சியத்தை வென்றெடுக்கப்போவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ttv-dinkaran-asks-to-give-donation-and-doesnt-any

கழகத்தினர் அனைவரும் என்னுடன் தோளோடு தோள் நிற்கையில் தோல்விகள் தோற்று ஓடுவதோடு இனி வெற்றிகள் மட்டுமே நம்மை வந்து சேரும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ள சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.

இந்த நேரத்தில் நான் பங்கேற்கும் கழக நிகழ்ச்சிகள், நிர்வாகிகள் கூட்டங்கள் என அனைத்திலும், என் மீதான உங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக சால்வை, பொன்னாடை அணிவிப்பது, மலர்களை தூவி வரவேற்பது, பூங்கொத்துக்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது என தொடர்ந்து நடைபெறும் சம்பிரதாய நிகழ்வுகள் நம் நிகழ்ச்சிகளுக்கும், நம்முடைய உரையாடல்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுத்துவதாக உணர்கிறேன்.

இது உத்தரவாதம்

நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கழக உடன்பிறப்புகளின் முகத்தில் தோன்றும் விலைமதிப்பில்லாத புன்னகையும், மனதில் ஏற்படும் அளப்பரிய மகிழ்ச்சியுமே ஆண்டவன் எனக்கு அளித்த வரமாக எண்ணி மகிழ்கிறேன். கழகத்தினரின் அன்பையும் ஆதரவையும் விட பூ மாலைகளும் பூங்கொத்துகளும் நினைவுப் பரிசுகளும் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

ttv-dinkaran-asks-to-give-donation-and-doesnt-any

ஏற்கனவே இது போன்ற சம்பிரதாய நிகழ்வுகள் வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தியும் பின்பற்றப்படாமல் இருப்பதால் இம்முறை அன்பு கலந்த கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இனி வரும் காலங்களில் மாலைகள், சால்வைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் பூங்கொத்துகளுக்கு செலவிடுவதற்கு மாறாக, தங்களால் இயன்ற நிதியுதவியை கழக வளர்ச்சிக்கு வழங்கி உதவுமாறு அன்பு கலந்த வேண்டுகோளாய் விடுக்கிறேன். கழக உடன்பிறப்புகள் அளிக்கும் நிதி ஏதேனும் ஒருவகையில் நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்பதை உங்கள் அனைவருக்கும் உத்தரவாதமாக அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.