“தினகரன் ட்வீட்டும்... எஸ்.பி.வேலுமணி ரெய்டும்” - வைரலாகும் மேட்சிங் ஸ்டோரி

admk ammk spvelumani ttvdinakaran
By Petchi Avudaiappan Aug 10, 2021 11:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 திமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்த டெண்டர்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தமிழக அரசின் நிதிநிலையை வெள்ளை அறிக்கையாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது அரசு பஸ் போக்குவரத்து கழகம், மின்சாரவாரியம் போன்றவை நஷ்டத்தில் இயங்கி வருவதை புள்ளி விவரங்களோடு அவர் தெரிவித்தார். இதனைப் பார்த்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நோக்கம் மின்சார கட்டணம், பஸ் கட்டணத்தை உயர்த்தவா? என்று கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர்.இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் ஒன்றை பதிவு செய்தார்.

அதில் “தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்”என தெரிவித்திருந்தார்.

இதனை பதிவிட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு தினகரன் போட்ட ஸ்கெட்ச் நன்றாகவே வேலை செய்கிறது என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.