கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வேண்டுகோள்

M K Stalin Kerala TTV Dhinakaran
By Karthikraja Aug 10, 2024 09:32 AM GMT
Report

கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணை தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் பல ஆண்டுகளாக அவ்வப்போது பிரச்சனை எழுந்து வருகிறது.

mullai periyaru dam

கேரளாவில் வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை எனவும் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டால் பெரும் பாதிப்பு நிகழும் எனவே புதிய அணை கட்ட வேண்டும் என கேரளாவில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக #DecommissionMullaperiyarDam #SaveKerala #savemullaperiyar என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

டிடிவி தினகரன்

இந்நிலையில் இது தொடர்பாக அமமுக நிறுவன பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த அறிக்கையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்.பி திரு. ஹிபி ஏடன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ttv dhinakaran

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவும், உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்த பின்பும், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.

சட்ட போராட்டம்

மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை செயல்படுத்த முன்வராத திமுக அரசால், தற்போது தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்மாவட்ட மக்களின் ஜீவாதாராமாக திகழும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க மறுப்பதும், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 39 உறுப்பினர்கள் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும் தென்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். 

எனவே, கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களை கொடுத்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.