2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? வெளிப்படையாக அறிவித்த டிடிவி தினகரன்
சீமான் மற்ற கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசுவது வருத்தமாக உள்ளது என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
டிடிவி தினகரன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்க, மாநாடு நடத்த, கோட்பாடுகளை வெளியிட, தேர்தலை சந்திக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. மக்கள் தான் அதை உற்று நோக்கி தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார்கள். அதை பற்றி நாம் கருத்து சொல்வது நாகரீகம் அல்ல.
தேர்தல் கூட்டணி
உதயநிதி ஸ்டாலின் தனது சட்டையில் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்திருப்பது தொடர்பான வழக்கை அவர் சட்டப்படி சந்திக்க வேண்டும். அவர் கட்சி சின்னதைதான் அணிந்துள்ளார். அது சரியா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.
நண்பர் சீமான் கடந்த ஒரு வருடமாக உணர்ச்சி மிகுதியில் பேசும் பேச்சுக்கள் விமர்சனங்கள் அரசியல்வாதியாக நமக்கே கொஞ்சம் வருத்தப்படும் அளவிற்கு உள்ளது. மறைந்த அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசுவது, மற்ற கட்சி தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்ததை பேசுவது உண்மையில் வருத்தம் அளிக்கிறது அதை அவர்தான் சரி செய்து கொள்ள வேண்டும்.
2026 தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தரும். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்னும் நீடிக்கிறது. 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அமமுக இடம்பெறும்" என பேசினார்.