மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பா? டிடிவி தினகரன் பதில்
மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.
டிடிவி தினகரன்
அதிமுகவின் துணைப்பொதுச்செயலராக டிடிவி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைத்து கொள்வீர்களா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, காலம் பதில் சொல்லும் என சூசகமாக தெரிவித்தார்.
எடப்பாடியுடன் இணைய வாய்ப்பு?
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "பழனிசாமியுடன் மீண்டும் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கி 7 ஆண்டுகள் முடிந்து, 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கினோமோ அதில் இருந்து பின்வாங்க மாட்டோம். தீய சக்தி திமுகவை வீழ்த்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்.
திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.