அதிமுவை மீட்டெடுப்பதே லட்சியம்:டிடிவி தினகரன் உறுதி - அதிர்ச்சியில் அதிமுக!
டிடிவி தினகரன் எடுத்துள்ள திடீர் சபதம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிடிவி தினகரன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் நாம் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் லட்சியங்களை தொடர்ந்து மக்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்து செல்லும் இயக்கமாக அமமுக இருக்கிறது.
நிச்சயம் ஜெயிப்போம்
அமமுக தொண்டர்கள் இருக்கும் வரை தினகரன் தோற்க மாட்டார். காணாமல் போக மாட்டார். இறப்பது ஒரு முறை. வாழ்வது ஒரு முறை. என்ன வருகிறது என பார்த்து விடலாம். யாரை பார்த்தும் எனக்கு பயம் இல்லை.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் வலம் வருவேன். ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரும் வரை ஓயமாட்டோம்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி வியாபார நோக்கத்துடன் செயல்பட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஊழல் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.
திமுகவின் சாயம் ஒரு வருடத்தில் வெளுத்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று? என்னடி மீனாட்சி? சொன்னது என்னாச்சு? என்று பாடலுக்கு ஏற்ப திமுக உள்ளது.
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போறாரு என ஆட்சிக்கு வந்த பின்பாக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருமோ, அப்போதெல்லாம் மின் தடையும் வந்துவிடும்.
பாரத பிரதமர் வந்து கலந்து கொண்ட மேடையை அரசியல் மேடையாக்கி விட்டார் ஸ்டாலின். மத்திய அரசை கண்டு திமுக பயப்படுகிறது. அம்மா ஆட்சி வரும் வரை ஓயமாட்டேன்.
அதிமுக உடன் நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை. அதிமுவை மீட்டெடுப்பதே லட்சியம். இழந்த இயக்கத்தை ஜனநாயக முறையில் மீட்டெடுப்போம்.
நாசகார சக்திகள் எங்களை பார்த்து தீய சக்தி என்கிறது. அந்த துரோக சக்தியை வென்று நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என தினகரன் கூறினார்.