நீதிமன்றத்தில் சரணடைந்த TTF வாசன் - ஜாமீனில் விடுவிப்பு
காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎப் வாசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வழக்குப்பதிவு
இருசக்கர வானத்தில் அதிவேகமாக செல்வதை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருபவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன்.
இவர் அண்மையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் போலீசார் இவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை அழைத்துக் கொண்டு கொச்சி சாலையில் 150 கி.மீ அதிவேகமாக சென்றதை வீடியோ பதிவாக எடுத்து வெளியிட்டு இருந்தார்.
இதன் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், போத்தனுார் காவல் நிலையத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது சாலை விதிகளை மீறுதல், அஜாக்கிரதையாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் சூலுார் காவல்நிலையத்தில் ஐபிசி 279 ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுதல், மோட்டர் வாகனச் சட்டம் 189 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டது.
ஜாமீனில் விடுவிப்பு
இதனையடுத்து இவர் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎஃப் வாசன் மாலை வரை நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார்.
பின்னர் அவரிடம் இரண்டு உத்தரவாதம் பெறப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.