மஞ்சள் வீரன் படம்..டிடிஎஃப் நீக்கம்..ஆனால் அவருக்கு தெரியாது - இயக்குநர் அறிவிப்பு!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.
மஞ்சள் வீரன்
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
பல முறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனால் மேலும் சர்ச்சையில் அவர் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். முன்னதாக அவர் இயக்குநர் செல்அம் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதன் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில்தான், அதிர்ச்சிகரமான செய்தியாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் செல்அம். இதில் என்ன ட்விஸ்ட் என்றால் இதை வாசனிடமே அவர் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
இயக்குநர் அறிவிப்பு
இதுதொடர்பாக செல்அம் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், “தயாரிப்பு நிறுவனம் என்னுடையது. எனவே ‘மஞ்சள் வீரன்’ பெயரை என்னுடைய நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்துள்ளேன். எனவே பெயருக்கு பிரச்னை வராது.
படத்தில் இருந்து நானும் வாசனும் பிரிந்துள்ளோம். இதுபற்றி இன்னும் அவரிடம் தகவல் தெரிவிக்கவில்லை. மற்றபடி தம்பி என்கிற உறவு அவருடன் எனக்கு தொடரும். இது ஒரு வாழ்வியல் படம்.
என்கூடவே என் ஹீரோ பயணிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் இந்த முடிவுக்கு காரணம். வரும் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்துகிறேன்” என தெரிவித்தார்.