வீடு புகுந்து பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் வீடு புகுந்து பெண்ணுக்கு வாலிபர் தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த குமார்-சாந்தி தம்பதியினர் அஸ்வினி என்ற மகளுடனும், ஒரு மகனுடனும் வசித்து வருகின்றனர். அஸ்வினிக்கு வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உறவுக்கார பையனுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 4 ஆம் தேதி எதிர்வீட்டில் வசிக்கும் அருண் என்பவரும், அவரது உடன்பிறந்த திருநங்கை இனியாவும் அஸ்வினியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அருண் அஸ்வினியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி தடுத்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அருணை அடித்து துரத்த அவர் வீட்டுக்கு சென்று தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போத்அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து அஸ்வினி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அருண் மற்றும் உடந்தையாக இருந்த திருநங்கை இனியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.