இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி ; எச்சரிக்கும் டிரம்ப் - என்ன காரணம்?

Donald Trump United States of America India Dollars BRICS summit
By Karthikraja Dec 01, 2024 08:00 AM GMT
Report

பிரிக்ஸ் நாடுகள் 100% வரி விதிப்பை சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ளார். 

donald trump warns brics

இந்நிலையில் தனது புதிய அரசிற்கான முக்கிய துறைகளின் நிர்வாகிகளை நியமித்து வருவதோடு, அமெரிக்காவில் வர உள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

100% வரி

தற்போது, அமெரிக்கா டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பிரிக்ஸ் நாடுகள் பயன்படுத்த முயன்றால் 100% வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிரிக்ஸ் நாடுகள் டாலரை விட்டு விலகிச் செல்ல முயல்கின்ற எண்ணம் முடிந்துவிட்டது. இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும். 

இல்லையெனில் 100% வரிகளை எதிர்கொள்வதோடு, அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறலாம். அவர்கள் வேறு ஏமாளியை தேடிச் செல்லலாம். சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை, மாற்ற முயற்சிக்கும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்து விடைபெற வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள்

பிரிக்ஸ் அமைப்பு 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்க டாலரை வைத்தே வர்த்தகம் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச வங்கி நெட்வொர்க்கான SWIFT இல் இருந்து ரஷ்யா விலக்கி வைக்கப்பட்டுள்ளது. 

brics summit india modi russia putin

கடந்த அக்டோபரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய ரஷ்யா அதிபர் புடின், "அமெரிக்கா தனது டாலரை கூட ஆயுதமாக்குகிறது. சர்வதேச வர்த்தகத்தில் நாங்கள் நாங்கள் டாலரை பயன்படுத்த மறுப்பது இல்லை. ஆனால், அமெரிக்கா எங்களை டாலரை பயன்படுத்த விடாமல் முடக்கியுள்ளதால் வேறு வழிகளை தேட வேண்டியுள்ளது" என பேசி இருந்தார்.