அமெரிக்காவின் நேரத்திலே அதிரடி மாற்றம் செய்ய உள்ள டிரம்ப் - என்ன தெரியுமா?
அமெரிக்காவின் பகல் சேமிப்பு நேர முறையை ரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
பகல் சேமிப்பு நேரம்
அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (Daylight Saving Time-DST) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் படி கோடைகாலங்களில் கடிகாரத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக வைப்பார்கள்.
கோடைகாலம் முடிந்த உடன் மறுபடியும் ஒரு மணி நேரம் பின்னுக்கு வைப்பார்கள். கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1 மணி நேர மாற்றம்
அமெரிக்காவில் மார்ச் மாத 2வது ஞாயிற்றுக்கிழமை கடிகாரத்தை 1 மணிநேரம் முன்னோக்கி நகர்த்தி பகல் சேமிப்பு நேரத்தை தொடங்குவார்கள். அதன் பின்னர் நவம்பரில் மீண்டும் 1 மணிநேரம் பின்னோக்கி வைப்பார்கள். இது ஒவ்வொரு நாடுகளிலும் தொடங்கும் நேரமும் முடியும் நாளும் மாறுபடும்.
இந்த முறையானது முதல் உலக போர் காலகட்டத்தில் தொடங்கியது. இந்தியாவில் கூட போர் நடைபெற்ற காலகட்டத்தில் மட்டும் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த முறையை ரத்து செய்தனர்.
டிரம்ப் அறிவிப்பு
பகல் நேரங்களில் ஏற்படும் நேர மாறுதல்களால் தூக்கம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி இந்த நடைமுறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில், பகல் சேமிப்பு நேர முறையை நீக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பகல் சேமிப்பு நேரத்தை நீக்க குடியரசுக் கட்சி சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும். தேவையில்லை. அது சிரமமானது மற்றும் அதிக செலவு மிகுந்தது அது நமக்கு தேவையில்லை" என கூறியுள்ளார்.