இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் - அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் ட்ரோன் மற்றும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலை முறியடித்து வரும் இந்தியாவும் பாகிஸ்தானிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
டிரம்ப் அறிவிப்பு
இரு நாடு தலைவர்களிடையே அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே, வரும் மே 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்திய பிரதமர் மோடி அணைத்து கட்சி கூட்டதிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.