அமெரிக்காவின் பெயர் மாற்றம்; சீண்டிய டிரம்ப் - விளாசிய மெக்சிகோ அதிபர்!
மெக்சிகோ பெயர் குறித்த டிரம்பின் அறிவிப்புக்கு அந்நாட்டு அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
டிரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். அதற்கு முன்னதாகவே பல்வேறு அதிரடி திட்ட அறிவிப்புகளையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கிரீன்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளை இணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக மெக்சிகோவை குறிவைத்துள்ளார். அதுகுறித்து பேசியுள்ள அவர், ”மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றப் போகிறேன்.
வெடித்த சர்ச்சை
இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்க வளைகுடா என்பது எவ்வளவு அழகான பெயர்? அது மிகவும் பொருத்தமானது” என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தொடர்ந்து இதற்கு பதிலளித்துள்ள மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம்,
”மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, ’மெக்சிகன் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றலாம். அந்தப் பெயரும் நன்றாக இருக்கிறது.
உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.