அமெரிக்காவின் 47 வது அதிபர்.. இன்று பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப் - வெளியான விவரம்!
அமெரிக்க அதிபராகப் டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்க உள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்கா அதிபர் தேர்தல் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸூம் , குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 270 பேரின் ஆதரவு பெறுபவரே, அடுத்த அதிபராக முடியும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் 2 வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், இன்று (20-01-25) காலை 10:30 மணிக்கு அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். 2வது முறையாக அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் , ஜே.டி.வானஸ் என்பவர் துணை அதிபராக இன்று பதவியேற்கவுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
இந்த பதவியேற்பு விழாவில் தொழிலதிபர்கள் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.மேலும் பதவியேற்பு விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.