எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி - அதிரடி காட்டும் டிரம்ப்
எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு நிர்வாகத்தில் முக்கிய பதவியை டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் அமைச்சரவை மற்றும் அரசுத் துறைகளை கட்டமைத்து வருகிறார்.
DOGE துறை
அந்த வகையில் புதிதாக அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி அதற்கு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமை வகிப்பார்கள் என அறிவித்துள்ளார்.
அரசாங்க செயல்திறன் துறை என்பது அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் வழி வகுக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது.
அரசாங்கத்தை வெளியில் இருந்து வழிநடத்த உள்ள இவர்கள், வெள்ளை மாளிகையுடன் இணைந்து நிதிநிலையை கவனிப்பதோடு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவார்கள் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விவேக் ராமசாமி
மேலும், 2026 ஜூலை 4 ஆம் தேதியை, இலக்காக நிர்ணயித்துள்ள டிரம்ப், அதற்குள் அமெரிக்கா பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, ஊழல் மற்றும் தேவையற்ற செலவினங்களை குறைக்க இவர்கள் உதவுவார்கள். அமெரிக்காவின் 250 ஆவது ஆண்டு சுதந்திரத் தினத்தில், மிகுந்த திறன் வாய்ந்த, குறைந்த துறைகளை கொண்ட அரசாங்கம், மக்களுக்கு பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தேர்தல் பிரச்சாரத்தின் வெளிப்படையாக டொனால்ட் டிரம்பை ஆதரித்து வந்தார். மேலும் பல கோடிகளை நன்கொடையாக வாரி இறைத்தார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் எலான் மஸ்க் பெரியளவில் ஆட்குறைப்பு செய்தது போல் அரசு நிர்வாகத்திலும் செய்வார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா தொழிலதிபரான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவில் பிறந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அவர் அதன் பின் டிரம்ப் வெற்றி பெற தீவிரமாக வேலை பார்த்து வந்தார்.