காங்கிரஸ் கட்சி என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே! கமல்ஹாசன்
நேர்மை தான் என்னுடைய ஆயுதம், தமிழக மக்களே என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். சென்னை தங்கச்சாலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக பாதை விலகாமல், பதற்றம் இல்லாமல் மக்கள் நீதி மய்யம் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
‘நாமே தீர்வு' என்று நாங்கள் சொன்னால் 'ஒன்றிணைவோம் வா' என்று சத்தம் மாறாமல் சொல்கிறார். இல்லதரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து கோட்பாடை முதல் கட்சியாக நாங்கள் தான் அறிவித்தோம். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றோம். அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கிறார். இரண்டும் ஒன்று தானே.
7 உறுதி மொழிகள் உள்பட அத்தனையும் காப்பி அடிக்கிறார். அப்படியாவது ‘பாஸ்' பண்ணவேண்டும் என்ற அவசரம் வந்துவிட்டது. டிஜிட்டல் தற்சார்பு திட்டம் என்று நாங்கள் சொல்லியதை ‘பிராட்பேண்ட்' என்று காப்பியடிக்கிறார்கள். 3-வது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். 100 ஆண்டுகளான கட்சி, உட்கார்ந்து பேசலாம் வாங்க என்று கூறினால், அங்கு சென்று தவழுகிறார்கள். 101 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்று தவழ்ந்து செல்கிறது.
இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா? சரி போய்விட்டீர்கள். மீண்டும் வருவீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும் என் வயது இருக்கும்போது, என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் நேர்மை அவர்களிடம் கிடையாது. நேர்மைதான் என்னுடைய ஆயுதம். என்னிடம் இருந்து மு.க.ஸ்டாலின் 'காப்பி' அடிக்கிறார்.
அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால், தமிழகம் பிழைத்திருக்கும். அரசியலுக்கு வந்ததும், விலகியதும் சம்பாதிப்பதற்காகத்தான். வியாபாரிகளிடம் இருந்து மீட்டெடுக்க என்னை கருவியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.