விழுப்புரம் அருகே வாகனம் கவிழ்ந்து விபத்து… 15 பேரின் நிலை என்ன?
விழுப்புரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்திலிருந்து, வீரப்பார் கிராமத்திற்கு ரங்கநாதன் என்பவரின் உறவினரின் துக்க நிகழ்வுக்கு சரக்கு வாகனத்தில் 25 பேர் சென்றுள்ளனர்.
வாகனம் பெரியசெவலை பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் ஏழுமலை திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த தேன்மொழி, சேட்டு என்கிற சேகர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 க்கும் மேற்பட்டோரை மீட்ட பொதுமக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ட்டனர். இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்து வந்த பெரியசெவலை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்செல்லக்கூடாது என்ற விதி இருந்து தடையை மீறி சரக்கு வாகனத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்து விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.