சாட்டையை சுழற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - தொழில்துறை அமைச்சராகும் டிஆர்பி ராஜா
அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள டிஆர்பி ராஜா அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார்.
அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கம்
அண்மை நாட்களாக தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது என்று தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் நேற்று பால்வளத்துறை அமைச்சராக இருந்து வந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாகவும் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எந்ததெந்த துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்ற உத்தேச பட்டியலை பார்க்கலாம்.
புதிய துறைகளின் அமைச்சர்களின் உத்தேச பட்டியல்
தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு - நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறை வழங்கப்படலாம் என்றும், இவருக்கு நிதித்துறையை வழங்க சில மூத்த அமைச்சர்கள் ஆதரவு கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறையை கவனித்து வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் - பால்வளத்துறை அமைச்சராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் தென்னரசு கவனித்து வரும் தொழில்துறை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.