தமிழகத்தின் தலைநகராக திருச்சி மாறும் - அமைச்சர் துரைமுருகன்!!
வரும் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக திருச்சி மாறும் என நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் பேச்சு
திருச்சி சென்றுள்ள திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, தமிழகத்தின் தலைநகராக திருச்சி தான் அமையவேண்டும் என கூறினார்.
இதனை எம்.ஜி,ஆரே சொன்னதாக குறிப்பிட்டு, தனக்கு அதிமுக பிடிக்காது என்றாலும் இந்த கருத்தை தான் ஏற்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதன்முதலில் தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டு திருச்சியில் தான் திமுகவால் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அந்த சம்பவம் திருச்சியில் நடைபெறவில்லை என்றால் தாங்கள் இன்று அமைச்சர்கள் இல்லை என்றார்.
மேலும், வரும் காலத்தில் நிச்சயமாக திருச்சி மாநிலத்தின் தலைநகராக ஒருவரால் மாற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.