சீமானால் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்க - பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா!
சீமானால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி சூர்யா
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. பாஜகவில் பொறுப்பு வகித்து வந்த இவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து?
அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். மேலும் இதே கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இவர்கள் என் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு அரசு விதிக்கும் உரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளேன். எனவே எங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கு குறித்த விவரங்கள் முழுமையாக தரவில்லை எனக் கோரி கால அவகாசம் கேட்டுள்ளனர். எனவே, வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.