பாஜகவில் இணைந்த திமுக எம்.பி.யின் மகன் - அதிர்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக மாநிலங்களைவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக திமுகவின் பிரபல பேச்சாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் சேரமுடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. திமுகவில் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக இருந்தும், தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்று அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் சூர்யா பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து அவர் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். இது திமுக தலைமையிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இணைந்தது குறித்து சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமளித்தார். அப்போது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் பாஜகவின் இணைந்துள்ளேன் என்றும், திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் பதவி வேண்டும் என்று பாஜகவுக்கு வரவில்லை. உழைப்புக்கான அங்கீகாரத்தை பாஜக கொடுக்கும். தான் பாஜகவில் இணைந்ததை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவிட்டால் பரவயில்லை என சூர்யா கூறியுள்ளார். அதேசமயம் திமுகவில் பல்வேறு விதமாக உட்கட்சி அரசியல் நடைபெற்று வருகிறது. எம்.பி. கனிமொழியிடம் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தது ஆனால் கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அவரின் அழைப்புகளை எடுக்கவில்லை" என சூர்யா தெரிவித்துள்ளார்.