திருச்சியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வருகை புரியும் அவர் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும்,பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதற்கான பிரமாண்டமான விழா திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் மாலை நடைபெறுகிறது. இதையொட்டி தனியார் கல்லூரி வளாக மைதானத்தில் மேடை, பந்தல் அமைக்கப்பட்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி கேர் கல்லுாரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல ஆண்டுகால முக்கிய கனவு திட்டமான பஞ்சப்பூரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல் உள்பட மொத்தம் ரூ.604 கோடியே 10 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம், கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுப்படுத்தப்படும் பணிகள்,
தரம் உயர்த்தப்பட்ட தார்சாலை பணிகள், மருங்காபுரி வட்டாரத்துக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மன்னார்புரத்தில் மண் பரிசோதனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஓடைத்துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும் அவர், 28 அரசு துறைகளின் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இந்த விழாவில் மொத்தம் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.