மனைவிக்கு ரூட் போட்ட தங்கையின் கணவர் : நடுரோட்டில் ஓட ஓட வெட்டிய மச்சான்
திருச்சி அருகே மனைவியை அபகரித்த தங்கையின் கணவரை பட்டப்பகலில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தேவதானத்தை சேர்ந்த சந்துரு என்பவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமார், சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார்.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி இறந்துவிட்டதால் அவரது மகளும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மைத்துனர் முறை கொண்ட சிவக்குமார் தங்கை முறை கொண்ட சந்துருவின் மனைவி சத்யாவுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார். இதைக் சந்துரு கண்டித்ததால் சத்யா, தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி, சிவக்குமாருடன் குடும்பம் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்துரு நேற்று பட்டப்பகலில்பெரிய அரிவாளை கையோடு எடுத்து வந்து திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் சிவக்குமாரை ஓட.. ஓட.., விரட்டி.. விரட்டி வெட்டியுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தனிப்பிரிவு ஏட்டு ராஜாமணி, சந்துருவை அரிவாளுடன் மடக்கி பிடித்தார். படுகாயமடைந்த சிவக்குமார் ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.