கணவன் எங்கே? மன உளைச்சலில் பெண் மருத்துவர் தற்கொலை
திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சஞ்ஜினி. இவர் தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் டிஸ்பென்சரி வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கும் மருத்துவர் கோகுல் என்பவருக்கும் கடந்த 2018 திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த நான்கு மாதகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல், நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் மருத்துவர் சஞ்ஜினி.
இந்த சூழலில் நேற்று தனது மகனுக்கு காதணி விழா நடத்தியுள்ளார். இதற்கு கணவர் கோகுலை அழைக்கவில்லை என்று தெரிகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை அறியாத உறவினர்கள் கணவன் எங்கே என்று கேட்டு துளைத்துள்ளனர்.
அத்துடன் பிரச்னை தெரிந்த சிலர் அறிவுரை கூறியுள்ளார். இதனால் சஞ்ஜினி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் சஞ்ஜினி மன உளைச்சலில் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கே.கே. நகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.