திருச்சி ஹீலியம் கேஸ் வெடி விபத்துக்கு சிகரெட் பிடித்ததே காரணம் - பலுான் வியாபாரி கைது
திருச்சி தி சென்னை சில்க்ஸ் துணிக்கடை அருகே நிகழ்ந்த ஹீலியம் கேஸ் வெடி விபத்திற்கு சிகரெட் பிடித்ததே காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் போத்தீஸ் துணிக்கடைகளுக்கு மத்தியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு ஆட்டோ திடீரென குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் அந்த பகுதியில் நின்ற பொதுமக்களும் ஜவுளிக்கடையில் துணிகள் எடுப்பதற்காக வந்தவர்களும் அலறி அடித்து ஓடினர்.
இந்த விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் கேஸ் சிலிண்டர் வெடித்து ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது. அருகில் நிறுதி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களும் சேதமாகின.
கேஸ் சிலிண்டரின் பாகங்கள் வெடித்து சிதறியதில் துணிக்கடையின் லிப்ட் கண்ணாடிகள், CCTV கேமராக்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி மாநகர வடக்கு போலீஸ் கமிஷ்னர் அன்பு, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பலுான் விற்ற நபர் கைது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பது தெரியவந்தது.
பலுான் விற்பனை செய்து கொண்டிருந்தவர் வைத்திருந்த ஹீலியம் கேஸ் அருகில் ரவி சிகரெட் குடித்த போது ஏற்பட்ட தீப்பொறி பட்டதால் தான் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதாக கூறப்படும் நிலையில் பலுான் விற்ற உ.பியைச் சேர்ந்த அனார் சிங் என்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 26 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.