திருச்சியில் கொடூரம் - நாயை அடித்து ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை ஆசாமிகள்
திருச்சியில் நாயை அடித்து ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை ஆசாமிகளின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாலக்கரை கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிலர் மது, கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை பிடித்து கல் மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் நாய் மயக்கமடைந்துள்ளது.
இதனையடுத்து நாயை ஆட்டோ ஒன்றில் அமர்ந்தவாறு ரோட்டில் தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இவ்வாறு செல்லும் போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூனி பஜார் பகுதியில் மது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அந்த நாயை அடித்து நாய் வேட்டை ஆரம்பம் என கத்தியவாறே ஆட்டோவில் இழுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் தகவல் தெரிந்து யார் இந்த வீடியோவை பதிவு செய்தார்கள் நாயை அடித்து மயக்க நிலையில் இருந்த நாயை தரதரவென இழுத்துச் செல்லும் ஆட்டோ பதிவினை கொண்டு யார் இந்த செயலில் ஈடுபட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.