இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 22 மாத குழந்தை - பெற்றோர் நெகிழ்ச்சி
திருச்சியில், கேட்கும் பொது அறிவு கேள்விக்கு தனது அழகிய மழலை குரலில் வேகமாக பதில் சொல்லும் 22 மாத குழந்தையை கண்டு பலரும் நெகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
புதிர் விளையாட்டில் (Puzzle) மிகுந்த ஆர்வம் காட்டும் 22 மாத குழந்தை சாய் தருண், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். தன் மகனின் திறமையைக் கண்டு பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி காஜாமலை லூர்து சாமி பிள்ளை காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரிதர் பிரசாத், பவித்ரா. இந்த தம்பதியின் மகன் 22 மாத மகன் சாய் தருண் மழலைப் பருவத்திலேயே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் செய்து வருகிறார், புதிர் விளையாட்டில் (Puzzle) மிகுந்த ஆர்வம் காட்டும் சாய் தருண் குறித்த நேரத்தில் நாம் காண்பிக்கும் பொருட்களை பார்த்து அந்த பெயர்களை சரியாக சொல்கிறார்.
மேலும், நம் இந்திய தேசிய சின்னங்கள், தலைவர்கள், உணவு பொருட்கள், வண்ணங்கள், ஆடைகள், நமது உடலின் பாகங்கள், பழங்கள், காய்கறிகள், போன்ற 72 பொருட்களை கலைத்து வைத்தாலும் நாம் சொல்லும் பொருட்களை சரியான முறையில் எடுத்து 30வினாடிகளில் அதை புதிர் விளையாட்டு அட்டையில் அடுக்கி வைக்கிறார்.
மேலும், நாம் கேட்கும் பொது அறிவு கேள்விக்கு தனது அழகிய மழலை குரலில் வேகமாக பதில் சொல்லும் சாய் தருண், பிறந்த 10 மாதத்திலேயே இதுபோன்று பல திறமைகள் இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் குழந்தையின் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக வெளி உலகிற்கு வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அவர் வெளிப்படுத்திய இந்த திறமை 2021 ஆம் ஆண்டு இந்தியா புக் ஆஃ ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பெற்று மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது. இந்த திறமை குறித்து சாய்தருன் தாய் பவித்ரா கூறுகையில், பிறந்த ஒன்றரை வயதிலேயே வெளிப்படுத்திய இந்த திறமையை பார்த்து நெகிழ்ந்ததாகவும், அவரது இந்த திறமை இந்தியா புக் ஆஃப் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த திறமையின் மூலம் இனி வரும் நாட்களில் இன்னும் பல சாதனைகள் புரிவார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சாய்த்தருன் தாத்தா கூறுகையில், “எங்கள் காலத்தில் இதுபோன்று ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லை. தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து வசதிகளும் வந்துள்ளன.
இதனால் பல முன்னேற்றங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்து வருகின்றனர்.
இப்போது தனது பேரன் இதுபோன்று படித்து சாதனை படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் இன்னும் நிறைய சாதனைகள் படைப்பதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்தார்.