காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின பெண் பலி

wildelephantattack tribalwoman
By Petchi Avudaiappan Dec 23, 2021 09:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின பெண் பலியான நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ராமபைலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி., பொம்மி, ராஜாத்தி, மாரக்காள் ஆகிய 4 பேரும் இக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் சென்று சுண்டைக்காய்களை பறித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது  வனப்பகுதியில் புதர் மறைவில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை அவர்கள் 4 பேரையும் துரத்த தொடங்கியது. இதையடுத்து காட்டு யானை மசனியை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில், கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் யானை துரத்தியதால் பொம்மி, ராஜாத்தி, மாரக்காள் ஆகிய மூன்று பேரும் கீழே விழுந்ததில் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. காட்டு யானையிடம் இருந்து தப்பிய மூவரும் ராமபைலூர் தொட்டி கிராமத்திற்குச் சென்று தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் வனத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் காயம்பட்ட மூன்று பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனப்பகுதியில் யானை மிதித்து இறந்த பெண் மசனியின் உடல் அருகே யானை நடமாடியதால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டியடித்த பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.