விரட்டிய வறுமை, தளராத மாணவி, மருத்துவ கனவை நினைவாக்க உதவிய கலெக்டர் - கூடுவாஞ்சேரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வசிக்கும் இருளர் இனத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி-தேவி தம்பதி.
இவர்களுக்கு பூஜா, சுவாதி, கார்த்திக் என மூன்று குழந்தைகள் உள்ளன. கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வரும் பார்த்தசாரதி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
என்ன தான் குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்தாலும் குழந்தைகளை படிக்க வைத்தால் மட்டுமே அவர்கள் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து
வைராக்கியத்துடன் வறுமைக்கிடையிலும், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே மாணவி பூஜா மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு 12-ம் வகுப்பில் 963 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதனை அடுத்து பூஜா நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்ற போதிலும் அந்த வருடம் அவருக்கு, எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை.
பூஜாவின் தந்தை பார்த்தசாரதி, நீ எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என தொடர்ந்து உத்வேகம் கொடுத்து மகளை நீட் தேர்வுக்கு படிக்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் பார்த்தசாரதி உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, குடும்பம் மேலும் வறுமையில் சிக்கியது .
ஆனால் தளர்ந்து போகாத மாணவி பூஜா தான் படித்தால் மட்டுமே தனது குடும்பம் அடுத்த நிலைக்குப் போகும் என்பதை உணர்ந்து,
மீண்டும் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 276 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது .
வறுமையின் காரணத்தினால், தனியார் கல்லூரியில் சேர முடியாமல் இருந்த மாணவி விடாப்பிடியாக படித்து தற்போது நடைபெற்ற நீட் தேர்வில்,
மூன்றாவது முறையாக 334 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு சீட் கிடைத்துள்ளது.
ஆனால் அவரால் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, கட்ட வேண்டிய பணம் கூட கட்ட முடியாத அளவிற்கு வறுவை சூழ்ந்து கொண்டது.
மாணவியின் வறுமை நிலை குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக தொண்டு நிறுவன அமைப்பை தொடர்பு கொண்டு,
சம்பந்தப்பட்ட மாணவிக்கு அனைத்துவித உதவிகளை செய்ய வேண்டும் என்று நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்.
சென்னையை சேர்ந்த சைல்ட் லைஃப் என்ற தொண்டு நிறுவனம், மாணவியின் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, தேவையான பணத்தை செலுத்தி உள்ளது.
மாணவிக்கு உடனடியாக உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கு மாணவி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.