மரங்களை காக்க நிபுணர் குழு அமைக்க கோரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

government tree highcourt order welfare
By Praveen May 01, 2021 10:03 AM GMT
Report

தமிழகம் முழுவதும் மரங்களை காப்பதற்காக நிபுணர் குழு அமைக்க கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள மரங்களை பாதுகாப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க கோரிய வழக்கில்,மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வனப்பாதுகாப்பு சட்டம், காற்று மாசு தடுப்பு சட்டம், நீர் மாசு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இருந்தாலும், தமிழகத்திலும், மத்தியிலும் மரங்களை பாதுகாக்க தனி சட்டங்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கர்நாடகா, டில்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மரங்களை பாதுகாப்பு சட்டங்கள் உள்ளதாகவும், இந்த சட்டங்களின் படி, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு மரங்கள் வெட்ட அந்த அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க தனி சட்டம் இல்லாததால் மரங்கள் வெட்டப்படுவது தொடர்வதாகவும், அதன் காரணமாக அரியவகை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்திலும் மரங்களை பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என அறிவித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த சட்டமும் நடைமுறைக்கு வரவில்லை எனக் கூறியுள்ள மனுதாரர், தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க நிபுணர்குழுவை அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை, பொதுப்பணித்துறை செயலாளர்களையும், டிஜிபியையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து, மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.