விவாகரத்து பெற்ற தாய், தந்தை கைவிட்டதால் பிள்ளைகள் செய்த அதிர்ச்சி செயல்
தாய், தந்தை இருவரும் விவாகரத்து பெற்று கைவிட்டதால் பிள்ளைகள் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு மதுரையை சேர்ந்த காந்திமதி என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து 21 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு இந்துமதி (வயது 18), கரண்ராஜ் ( வயது 20) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் தாயிடம் வளர்ந்து வந்தார்கள். பிள்ளைகள் வளர்ந்து விட்டதாக கூறிய தாய் காந்திமதி பிள்ளைகளை தந்தையிடம் சென்று விடும் படி கூறி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து பிள்ளைகள் இருவரும் தஞ்சை கரந்தை பகுதியில் வசிக்கும் தந்தை கனகராஜை சென்று சந்தித்துள்ளனர். இத்தனை நாட்களாக தாயிடம் தானே இருந்தீர்கள். இப்போது எதற்கு இங்கே வந்திருக்கிறீர்கள். சொத்துக்காக இங்கே வந்திருக்கிறீர்களா என்று கூறி திட்டி, இங்கு உங்களுக்கு இடம் இல்லை. நீங்கள் இருவரும் உங்கள் தாயிடமே சென்று விடுங்கள் என துரத்தி விட்டுள்ளார்.

தாயும், தந்தையும் கைவிட்ட நிலையில் இருவரும் இருப்பதற்கு இடமில்லாமல் மனமுடைந்து போனார்கள். இருவரும் விஷம் அருந்தி இறந்துவிடலாம் என்று முடிவு செய்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள். இவர்கள் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தஞ்சை கிழக்கு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.