சென்னையில் பரபரப்பு - பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர்.
தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கனநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.