கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஊழியர் - அதிரடியாக உத்தரவிட்ட தமிழக அரசு
அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்த கோரிக்கை வைத்த போக்குவரத்து ஊழியர் கண்ணனுக்கு பணியிடை மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அதிர்ச்சி
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கோவை சுங்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை திறந்து வைத்த பின்பு, பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி போன்ற சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, மேடை ஏறிய, அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், தனது 6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மனைவி இல்லை
அவர் தனது கோரிக்கையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவி டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துள்ளார் என குறிப்பிட்டு, அதன் காரணமாக குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலையில் இருந்து தவிப்பதாகவும், அதனால் தனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிடை மாற்றம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
பணியிடை மாற்றிய அரசு
இந்நிலையில், நேற்று இரவு கண்ணனுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் கோரிக்கை வைத்தது போலவே, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.