கலைக்கட்டிய கூத்தாண்டவர் கோயில் திருவிழா - பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட ஏராளமான திருநங்கைகள்!
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று தாலி கட்டிக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் இந்துக்களின் புராண நூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவுறுத்தும் வகையில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
மகாபாரதப் போரை குறிக்கும் வகையில் சம்பர்தாயங்களோடு சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி சாகை வார்த்தல் மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி மும்பை டெல்லி கொல்கத்தா பெங்களூர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டு மணப்பெண் போல் தங்களை அலங்கரித்து அரவானை கணவராக ஏற்றுக்கொண்டு பூசாரி கையால் தாலி கட்டி கொண்டனர்.
பின்னர் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்து பின் அதிகாலையில் நடைபெறும் திரு தேரோட்டத்தில் அரவானை தரிசனம் செய்து தங்கள் தாலியை துறந்து விதவை கோலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள்.
மறுநாள் தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.