திருநங்கையாக மாற எதிர்ப்பு கிளம்பியதால் விபரீத முடிவை எடுத்த வாலிபர்
வியாசர்பாடியில், திருநங்கையாக மாற, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், வாலிபர் ஆசிட் குடித்து, கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த, 21 வயது வாலிபர், பெற்றோருடன் வசிக்கிறார். இவருக்கு, இரு ஆண்டுகளாக, உடலில் மாற்றம் ஏற்பட்டு, திருநங்கையாக மாறி வந்தார்.இதனால், அதிர்ச்சிஅடைந்த பெற்றோர், மகனுக்கு ஆறுதல் கூறி, சமாதானம் செய்து வந்தனர். இருப்பினும், திருநங்கையாக மாறுவதை உணர்ந்த வாலிபர், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
இதனால், பெற்றோர் -வாலிபர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், சண்டை ஏற்படவே, விரக்தி அடைந்த வாலிபர், கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்து குடித்தார்.
கத்திரிக் கோலாலால் தன் வயிற்றை குத்தி கொண்டதுடன், சிறிய கத்தியால் கழுத்திலும் அறுத்துக் கொண்டார். வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த பெற்றோர், அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மயக்க நிலையில் உள்ள வாலிபருக்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.