வேலூரில் திமுகவை சேர்ந்த திருநங்கை அபார வெற்றி
பரபரக்கும் நகர்ப்புற தேர்தல் முடிவுகளில் திருநங்கை வெற்றி !
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் 37வது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல், தி.மு.க. உறுப்பினராக இருந்து வரும் திருநங்கை கங்கா நாயக், இத்தேர்தலில் தி,மு.க. கட்சி சார்பாக 37 வது வார்டில் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருநங்கை கங்கா நாயக் 2131 வாக்குகள் பெற்று 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு பல தரப்பிலிருந்து பாராடுக்கள் குவிந்து வருகிறது. மேலும் 20 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் கங்கா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினராக இருந்திருக்கிறார்.
மேலும், தற்போது தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராக இருந்து, 50 பேர்கொண்ட கலைக்குழுவையும் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.