தவறான நோக்கம்.. எனக்கு தொந்தரவு கொடுக்க பணியிட மாற்றம் - நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு!
எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்' என பணி ஓய்வு பெற்ற நீதிபதி பிரிதிங்கர் திவாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிதிங்கர் திவாகர்
உத்திரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள 'அலகாபாத் உயர் நீதிமன்ற' தலைமை நீதிபதியாக இருந்தவர் பிரிதிங்கர் திவாகர் (Pritinker Diwaker ). இவரின் பணிக்காலம் முடிவடைந்து விடைபெற்று செல்வதால் நேற்று அவருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் "சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2009ல் நியமிக்கப்பட்டேன். கடந்த, 2018ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு என்னை பணியிட மாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்தது.
குற்றச்சாட்டு
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா ஒரு தவறான நோக்கத்துடன் என்னை பணியிட மாற்றம் செய்தார். எனக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என அவர் நினைத்தார்.
ஆனால், தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்தார். என்னை இந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார். அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை குறித்து சர்ச்சை உள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரிதின்கர் திவாகர் கூறியுள்ள புகார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.