அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள் - உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்
ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ஒரு குடும்பம் ரயிலில் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், ரயில் வர 4 மணி நேரம் ரயில் தாமதமானதால் அவர்கள் அதிக வாடகை கொடுத்து காரில் சென்றனர்.
ரயில் தாமதம் காரணமாக அங்கிருந்து அவர்கள் ஏற வேண்டிய விமானத்தையும் தவறவிட்டனர். ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்கான முன்பதிவும் ரத்தானது.
இதையடுத்து, ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம், சேவைக் குறைபாட்டுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அக்குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அந்த குடும்பத்துக்கு ரூ.30,000 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வடமேற்கு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, ரயில் தாமதமாக வருவதற்கும், புறப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கும் என்று மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் தீரிப்பளித்த உச்சநீதிமன்றம், பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும்.
ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதான ஆதாரங்களையும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு பயணிக்கும் நேரம் விலைமதிப்பில்லாதது.
ரயில் தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில், ரயில் தாமதமாக வந்தமைக்கு இழப்பீடு தருவதற்கு ரயில்வே கடமைப்பட்டுள்ளது எனக் கூறி ரயில்வேயின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.