ரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
கொரோனா முடக்கத்தால் கடந்த ஆண்டு அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட நிலையில் ரயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட ஆரம்பித்தன. ஆனால் ரயில்கள் முன்பை போல முழுமையான வேகத்தில் இயக்கப்படவில்லை.
தற்போது அனைத்துமே சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே அனைத்து ரயில்களையும் இயக்க உத்தரவிடக்கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பேருந்துகளை விட ரயில்களில் கட்டணம் குறைவு என்றும், ரயில்கள் முழுமையாக இயங்காததால் வியாபாரிகள் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதில் ரயில்களை முழுமையாக இயக்க ரயில்வே துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்போதைய கொரோனா பரவல் சூழலால் நீதிமன்றங்களை திறக்கும் முடிவைக் கூட திரும்பப் பெற்றுள்ளோம். நிபுணர்களை கலந்தாலோசித்து ரயில்வே நிர்வாகம் இது சம்பந்தமாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.