திருவாரூர் அருகே டீசல் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து - ரயில்சேவைகள் பாதிப்பு
திருவாரூர் சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் சரக்கு ரயில் தீ விபத்து
சென்னை, மணலியில் இருந்து, சரக்கு ரயில் ஒன்று, 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று (ஜூலை 13) அதிகாலை மைசூர் நோக்கி புறப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே சென்ற போது, ரயில் திடீரென தடம்புரண்டு, 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர்களில் உரசல் ஏற்பட்டு ஒரு டேங்கரில் தீப்பற்றியது.
இதனையடுத்து, தீ மற்ற டேங்கர்களுக்கும் பரவி, 52 டேங்கர்களில் 18 டேங்கர்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
தகவலறிந்து, திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 85 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
6 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 3 மணி நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ரயில்கள் ரத்து
இந்த தீ விபத்தால் சென்னை சென்ட்ரலிலிருந்து கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
Following the fire accident near Tiruvallur Overhead power supply has been put off as safety precautions. All efforts have been taken to put off the fire, hence the following changes have been made in the pattern of train services#SouthernRailway pic.twitter.com/nEofQzTNH7
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டாம் என்றும், விபத்து நடந்துள்ள பகுதி அருகே வசிப்பவர்களில், சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீ தொடர்ந்து எரிவதால், சுற்றியுள்ள பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன.
எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது. தீ இன்று அணைக்கப்பட்டாலும், காற்றில் ஏற்பட்ட மாசு நீங்கி, மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க இன்னும் 2 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.