திடீரென வெடித்து சிதறிய பயிற்சி விமானம் - சென்னை பெண் மகிமா உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், துங்கதுர்த்தி கிராமத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு பயிற்சி விமானம் நேற்று விபத்துக்குள்ளானது.
இந்த பயிற்சி விமானம், ஐதராபாத்தைச் சேர்ந்த விமானப் பயிற்சி பள்ளியான Flytech Aviation Academy-க்கு சொந்தமானது. இந்த விமானம் குண்டூர் மாவட்டத்திலுள்ள மச்செர்லாவிலிருந்து புறப்பட்டது.
வானத்தில் பறந்துக கொண்டிருந்த பயிற்சி விமானம், திடீரென்று பயங்கர சத்தத்துடன் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கி எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலை அறிந்ததும், போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த மகிமா என்பது தெரிவந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பிகளில் விமானம் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.