இனிமேல் ரயில் டிக்கெட்டுக்கு நிற்க வேண்டாம் - பயணிகள் மகிழ்ச்சி!
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து சேவை ரயில் சேவை தான். தினமும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல லட்சம் மக்கள் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நீண்ட பயண தூரத்திற்குச் செல்வதற்கு விலை குறைவான போக்குவரத்து ரயிலை விட்டால் வேறு எதுவுமே இல்லை. இதனால் ஏழை, எளியோருக்கான வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
இதில் முன்பதிவு செய்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலேயே முடிந்துவிடுகிறது. ரயில் கிளம்புவதற்கு 15 நிமிடத்திற்கு முன் வந்து கோச் பார்த்து ஏறிக் கொள்ளலாம்.
உண்மையில் அதிக சிரமத்திற்குள்ளாபவர்கள் Genral எனும் முன்பதிவு செய்யப்படாத (Unreserved Coach) பொது பெட்டியில் பயணிப்பவர்கள்தாம். அவர்கள் ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வந்து கவுண்டர்களில் டிக்கெட் வாங்கும் நிலை ஏற்படுகிறது. கொஞ்சம் தாமதமானாலும் நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்க வேண்டியுள்ளது.
அவர்களால் ஒருநாள் கூட ஒரு பயணத்தை இனிதாக நிறைவுசெய்ய முடிந்ததில்லை. ஆகவே அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் புதிய முயற்சியைக் கையாண்டுள்ளதூ தென் மத்திய ரயில்வே மண்டலம். ஆம் டிக்கெட் வழங்கும் பயோமெட்ரிக் டோக்கன் இயந்திரத்தை தெலங்கானாவிலுள்ள செகுந்துராபாத் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த மெஷின் ஒவ்வொரு பயணியின் பெயர், PNR நம்பர் ரயில் நம்பர், செல்லும் ஊர் உள்ளிட்ட தகவல்களைப் பயணிகளிடம் பெற்றுக் கொள்கிறது. இதற்குப் பிறகு, பயணிகளின் பயோமெட்ரிக் தகவல்களான அவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை போன்றவற்றையும் பெற்றுக் கொள்கிறது.
இந்த நடைமுறை முடிந்தபின் அந்த மெஷின் தாமாகவே டோக்கனை ஜெனரேட் செய்து பயணிகளுக்கு அளித்துவிடுகிறது. அவ்வளவு தான் வேலை முடிந்தது. தற்போது பயணிகள் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோச் மற்றும் சீட் எண் அடிப்படையில் அமர வேண்டும்.
இதன்மூலம் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்கும் மக்களுக்கு இனி சிரமம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் வந்தால் போதுமானது. அதேபோல பயணிகளுக்கு மட்டுமல்லாமல் ரயில்வே துறைக்கும் நன்மை இருக்கிறது.
வரிசையை ஒழுங்குப்படுத்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை அதிகம் பயன்படுத்த தேவையில்லை. மெஷின் பதிவுசெய்துள்ள பயோமெட்ரிக் தகவல்களின் அடிப்படையில் ரயில்களில் நிகழும் குற்றச்சம்பவங்களையும் குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முதல் பயோமெட்ரிக் மெஷின் செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இரண்டாவது மெஷினை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.