ரயிலை நோக்கி தற்கொலைக்கு முயன்ற பெண் - விரைந்து காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை!
ஆம்பூர் அருகே கணவனிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆம்பூர் ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி மனைவி சந்திரமதி மற்றும் 2 குழந்தைகளோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சந்திரமதி ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு ஆம்பூர் ரயில் நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் மீது பாய சந்திரமதி தண்டவாளத்தின் நடுவில் விரைந்து நடந்துகொண்டிருந்தார். இதனை கண்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணவனோடு ஏற்பட்ட தகராறில் இந்த முடிவு எடுத்திருப்பதாக சந்திரமதி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கணவன் ராஜி மற்றும் உறவினர்கள் ஆகியோரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், சந்திரமதிக்கு அறிவுரை வழங்கி அவர்களோடு அனுப்பி வைத்தனர்.