ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் தொடங்கியது ரயில் சேவை - ஊர்ந்து செல்லும் ரயில்கள்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
ஒடிசா ரயில் விபத்து
இந்த விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி தடம் புரண்டது. இந்த ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.900-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் ரயில் சேவை தொடங்கியது
இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பிறகு விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் சரக்கு ரயில் சேவை நேற்று இரவு தொடங்கியது.
விபத்து நடந்த பகுதியில் நேற்று முன் தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார்.

ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் ரயில் சேவை தொடங்கி உள்ளது. நேற்று வரை 90 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக விபத்து நடந்த பாலசோர் பகுதி வழியாக பயணிகள் ரயில் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றது.
Down-line restoration complete. First train movement in section. pic.twitter.com/cXy3jUOJQ2
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2023