கண்முன் பறிபோன பல உயிர்கள் - உயிர் பிழைத்த பயணிகள் வேதனை
ரயில் விபத்து
ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டையே உலுக்கிய இந்த கோர ரயில் விபத்து சம்பவத்தின் மீட்புப் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஒன்றிய,மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்து உயிர் பிழைத்த தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பத்திரமாக விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “இந்த விபத்து 7.15 முதல் 7.30 மணிக்குள் நடந்தது. விபத்து நடந்தபோது, மேல்படுக்கையில் இருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர்.
பயணிகள் வேதனை
4 பெட்டிகளை தவிர அனைத்து பெட்டிகளுமே தடம் புரண்டன. பி5 உட்பட மற்ற பெட்டிகள் எல்லாம் சரிந்து, ரயில் மோதி ஒவ்வொரு பக்கமாக பெட்டிகள் கிடந்தன. முன்பதிவின்றி பயணித்தவர்கள் தான் அதிகம் இறந்திருக்கிறார்கள். விபத்து நடக்கும் போது வலது பக்கம் சரக்கு ரயில் சென்றுக்கொண்டு இருந்தது. சரியாக சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் எப்படி விபத்தில் சிக்கியது என்று தெரியவில்லை. கண் முன்னே நிறைய பேரின் இறப்பை பார்த்தேன்.
15 நிமிடத்திற்கு பிறகு தான் ஆம்புலன்ஸ் வந்தது. ஏசி கோச் பி4, பி5 எல்லாம் அதிகம் பாதிப்பை சந்தித்திருந்தது. விபத்து நடந்து ஒன்றரை மணி நேரம் வரை அங்கிருந்தோம். எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தோம். சிலர் கொல்கத்தாவுக்கும், சிலர் சென்னைக்கு புறப்பட்டோம். பி8 கோச்சில் இருந்த எல்லோரும் நிலை தடுமாறி கீழே விழுந்து அடியுடன் தப்பித்தோம்.
தீப்பற்றிது போல வாடை வந்தது. பி 6க்கு பிறகு உள்ள பெட்டிகள் லேசாக தான் சாந்திருந்தது. ரயில்வே பைலட் பிரேக் அடிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் கூட இறந்திருப்போம். பைலட்டின் கடைசிக்கட்ட முயற்சியால் தான் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்என்றனர்.