தண்டவாளத்தில் விழுந்த குழந்தை - காப்பாற்ற் குதித்த தாய் மீது மோதிய ரயில் : கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
வேலூர் அருகே தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற குதித்த தாய் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மனைவி யுவராணி தனது 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது.
அதைப் பார்த்து பதறிய யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக்கொண்டு மேலே ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் யுவராணி மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயத்துடன் யுவராணி கீழே விழுந்தார். கைக்குழந்தையும் தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக ரயில் டிரைவர் ரயில் என்ஜினை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து காட்பாடி ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தாய் மற்றும் கைக்குழந்தையை மீட்டனர்.
பின்னர் கைக்குழந்தையுடன் யுவராணியை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரயில்வே தண்டவாளத்தில் கைக்குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.