ரயில் விபத்தில் பறிபோன உயிர்கள்.. பாடம் கற்றுக் கொள்ளாத மத்திய அரசு- ராகுல் தாக்கு!
ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரப்பேட்டையிலும் விபத்து நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ரயில் விபத்து
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. 90 கி.மீ. வேகத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தது .
இரவு 8.27 மணி அளவில், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது,அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதனையடுத்து அந்த பகுதியில் திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே காவல்துறை, ஆர்.பி,எஃப். காவல்துறை, பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தி
இந்த நிலையில், இந்த ரயில் விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,’’ ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரப்பேட்டையிலும் விபத்து நடந்துள்ளது.
ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படப் போகிறது ? . எனத் தெரிவித்துள்ளார் .